×

நத்தத்தில் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது

நத்தம், டிச.22: நத்தத்தில் நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது. செந்துறை சாலையில் நத்தம் அவுட்டர் முதல் புதுப்பட்டி வரையிலான சாலையை சீரமைக்க கோரி, நத்தம் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தி பஸ் மறியல் செய்வதாக அறிவிப்பு செய்தனர். இது பற்றி அறிந்த நத்தம் தாசில்தார் சுகந்தி தலைமையில் தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வர்த்தகர்கள் சங்கம் சார்பில் தலைவர் சேக்ஒலி உள்ளிட்ட நிர்வாகிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(நிகாய்) சார்பில் கனகவேல் மற்றும் சுகுமாரும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது இப்பகுதியில் நத்தம்-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் இப்போது புகார் கூறப்படும் சாலையை பராமரிக்கும் பொறுப்பு நிகாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழக நெடுஞ்சாலைத்துறை நத்தம் உதவி பொறியாளரால் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நிகாய் தரப்பில் கலந்து கொண்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் முறையாக அந்த சாலையை அமைத்து தருவதுடன் பராமரிக்கவும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து வர்த்தகர்கள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதில் நத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன், மண்டல துணை தாசில்தார் மாயழகன், வேலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன், வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nathdwara ,
× RELATED நத்தத்தில் 34 பேர் மனுதாக்கல்