தா.பழூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

தா.பழூர், டிச.22:அரியலூர் மாவட்டம் தா.பழூர் சிவன் கோவில் தெருவில் சுமார் 3 மாதகாலமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. தினகரன் செய்தி எதிரொலியால் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குழாய் தா.பழூர் சிவன் கோயில் தெரு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழையால் கொள்ளிடத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது மீண்டும் தண்ணீர் குடிநீர் வினியோகம் செய்ய திறந்து விடப்பட்ட நிலையில் உடைப்பில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் உடனடியாக இந்த உடைப்பை சரி செய்து பொது மக்கள் சுத்தமான நீரைப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் கண்ணதாசன், மின் காப்பாளர் வேல்முருகன், ஒப்பந்ததாரர் பாலுசாமி ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்து பணியாளர்களை கொண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உடைப்பை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் உடைப்பை சரி செய்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: