நாகை மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று நாகூரில் ரூ.2 கோடியில் நெய்தல் பூங்கா

நாகை, டிச.22: தமிழக அரசின் அறிவிப்பின்படி நாகை அருகே நாகூரில் ரூ.2 கோடியில் நெய்தல் பூங்கா அமைய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த இடமுமான நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, தாவரவளம் (மரம், செடி, கொடிகள், மலர்கள்), பழங்கள், உணவு, கலை, பண்பாடு, இசை, யாழ் ஆகியவற்றை பறைசாற்றம் வகையில் நாகை அருகே நாகூரில் நெய்தல் பூங்கா அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் இளம் தலைமுறையினருக்கு பண்டைய தமிழர்களின் பண்பாட்டை எடுத்து காட்டப்படும். அதே நேரத்தில் பண்பாடு தொடர்ந்து நீடிக்கும்.

எனவே நெய்தல் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைப்புடன் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது நாகூரில் நெய்தல் பூங்கா அமையும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக 3.06 எக்டேரில் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தது. தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி துறை நாகூர் கிராமத்தில் தோட்டக்கலை துறைக்கு ஒதுக்கப்பட்ட 7.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடியே 225 லட்சம் மதிப்பில் நெய்தல் பூங்கா அமைத்து அதை பராமரிப்பு செய்யும்.

கடலும் கடல் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறை, உணவு தொழில், காலநிலை, தாவர மற்றும் விலங்கு இனங்கள் இடம் பெறுவதுடன் பொழுதுபோக்கு போன்றவை இந்த பூங்காவில் இடம் பெறும். மேலும் பல்வேறு வகையான அல்லி இனங்களுடன் குட்டைகள், நெய்தல் நிலத்திற்குரித்தான புன்னை மரம், பனை மரம், நாவல் மரம் அதிகம் இடம்பெறவுள்ளது. மீன் மற்றும் இதர கடல் வளங்களான பவளப்பாறை, முத்துச்சிப்பி போன்றவை செடிகளால் வடிவமைக்கப்படும்.

மீனவர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் படகு வடிவிலான இருக்கைகள் அமைக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூ.15 லட்சத்தில் இடம் தேர்வு செய்யப்பட்ட இடமான நாகூர் சில்லடிதர்கா அருகே புதர்செடிகள் அகற்றம், நிலத்தை சமன்படுத்தும் பணி இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. ரூ.57 லட்சத்தில் பூங்கா அமைந்தவுடன் நடைபாதை அமைத்தல், பூங்கா உள்பகுதியில் நடைபாதை, இணைப்பு பாதை, பாதையின் இரு பகுதிகளிலும் அலங்கார செடிகள் அமைக்கப்படும். ரூ.17 லட்சம் மதிப்பில் அழகிய நுழைவு வாயில், நுழைவு சீட்டு வழங்கும் இடமும், ரூ.10 லட்சம் மதிப்பில் வேலி மற்றும் உயிர்வேலி அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு பல வகையான வசதிகள் இடம்பெறவுள்ளது. இவ்வாறு கடல்வளம் மற்றும் கடல் வாழ் மக்களின் வாழ்வாதரத்தை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்து கூறும் வகையில், இந்த பூங்கா அமையவுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் சித்திக் கூறியதாவது: நாகூர் சில்லடி தர்கா அருகே நெய்தல் பூங்கா அமைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பூங்கா அமைந்தால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதை கவனத்தில் கொண்டு பூங்கா அமையவுள்ள இடத்தில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும். பூங்கா செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: