நரிக்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இயக்க வலியுறுத்தி மறியல்

காரியாபட்டி, டிச. 21: நரிக்குடி அருகே நாலூர் கிராமத்தில் தினமும் இரவு 9.30 மணிக்கு காரியாபட்டியிலிருந்து வரும் அரசு பஸ் நிறுத்தப்பட்ட கூறப்படுகிறது. எனவே, இந்த பஸ்சை இயக்க வலியுறுத்தி போக்குவரத்து டிப்போ அதிகாரியை சந்தித்து மனு மக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நாலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நாலூர் கிராமத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரவு நேரத்தில் பஸ் வேண்டுமென திடீர்பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நாலூர், மானாமதுரை சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கட்டனூர் எஸ்ஐ அந்தோணிராஜ், தனிப்பிரிவு போலீசார் சேவியர், நாலூர் விஏஓ தென்னரசு ஆகியோர் பஸ்மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் சமாதானம் அடையவில்லை. இரவு நேரத்தில் அருப்புக்கோட்டை, மதுரை, காரியாபட்டி உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்கு செல்வோர் வியாபாரிகள் போன்றவர்கள் ஊருக்கு திரும்ப வருவதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் வழக்கம்போல் இயக்கப்பட்ட இரவுநேர பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காரியாபட்டி பஸ் டிப்போ அதிகாரி பாலமுருகன் உள்ளிட்டோர் மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு  பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: