கம்பம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1598 பேருக்கு பணி நியமன ஆணை எம்.எல்.ஏக்கள், கலெக்டர் வழங்கினர்

கூடலூர், டிச. 21: கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு அரசின் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்து பேசினார். கல்லூரி செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்ராஜ் வரவேற்புரையாற்றினார். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

முகாமில், ‘8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பிற தொழிற்கல்வி பயின்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 9,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப, அவர்களை நேர்காணல் செய்து, தகுதியானவார்களை  தங்கள் நிறுவனங்களுக்குத்  தேர்வு செய்தனர். கல்வி தகுதி மற்றும்  தனித்திறன் அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு 1,598 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர், எம்எல்ஏக்கள் வழங்கினர்.

முகாமில், தேனி மாவட்ட எஸ்பி பிரவின் உமேஷ் டோங்ரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், திமுக நகர செயலாளர்கள் வக்கீல் துரைநெப்போலியன், சூர்யா செல்வகுமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories: