×

விவசாயிகள் ஆர்வத்தால் பருத்தி சாகுபடி பரப்பு பழநி பகுதியில் அதிகரிப்பு

பழநி, டிச.21: பருத்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் பழநி பகுதியில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.  பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. பழநி பகுதியின் கிழக்கு  மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, போதுப்பட்டி, தேவத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, காளிபட்டி ஆகிய பகுதிகள் கரிசல் நிலப் பகுதிகளாகும்.

இப்பகுதிகளில் போதிய நீர்பாசன வசதிகள் இல்லாததால் பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவரி நிலமாகவும், கிணற்றுப் பாசனத்தை நம்பியும் இருந்து வருகிறது. இப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. இச்சாகுபடியில் வண்டு தாக்குதல், மகசூல் குறைவு போன்றவையாலும், போதிய விலை கிடைக்காததாலும், தற்போது பருத்திக்கு அதிக விலை கிடைப்பதாலும் பருத்தி சாகுபடி செய்யப்படும் பரப்பு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை 100 ஹெக்டேருக்கு குறைவாக இருந்த பருத்தி சாகுபடி பரப்பு கடந்தாண்டு 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 183 ஹெக்டேருக்கு மேல் தாண்டியுள்ளது.

இதுகுறித்து கணக்கன்பட்டியைச் சேர்ந்த பருத்தி விவசாயி தங்கமுத்து என்பவர் கூறியதாவது: ஒரு குவிண்டால் ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையான பருத்தி தரத்தைப் பொறுத்து, தற்போது சுமார் ரூ.3 ஆயிரத்து 700ல் மேல் விற்பனையாகிறது. இது ஒரு 150 நாள் பயிர். உரமிடுதல் மற்றும் பராமரித்தல் எளிதாக உள்ளது. நீர் தேவை குறைவாகக் கொண்டது. மக்காச் சோளத்திற்கு போதிய விலை கிடைக்காததாலும், பருத்திக்கு அதிகவிலை கிடைப்பதாலும் தற்போது எங்களைப் போன்ற பெரும்பாலான மானாவரி விவசாயிகள் பருத்தி சாகுபடிக்கு மாறி வருகின்றனர். தமிழக அரசு பருத்தி விவசாயத்தை அதிகரிக்க பருத்தி விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்