×

மூலப்பொருட்கள் விலை உயர்வு: 1,500 இரும்பு பட்டறைகள் ஸ்டிரைக் ரூ.10 கோடி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர், டிச.21: மூலப்பொருட்கள் விலைஉயர்வின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 1,500 இரும்பு பட்டறைகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கிரில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான இரும்பின் விலை 100 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல இரும்பு பட்டறைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் இரும்பின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கு குடும்ப நல நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். 7.5 கிலோவாட் வரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடந்தது.

இது குறித்து தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் வடிவேல் கூறியதாவது: மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரும்பு பட்டறைகள் மூடப்பட்டு, ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 1,500 இரும்பு பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்லும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். அதன்படி நேற்று மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.10 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது. அரசு உடனே தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். என்றார். முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் வினீத்திடம் மனுவும் கொடுத்தனர்.

Tags :
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்