ஏழை, எளிய மக்களை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது சிறப்பு குறைதீர் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

திருச்சி, டிச.21: திருச்சி மேற்கு தாலுகாவுக்குட்பட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் வெஸ்டரி பள்ளியில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தனர். முகாமில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ஒவ்வொரு பகுதியாக நேரடியாக சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்று, உடனடியாக மக்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதின் பேரில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதியிலும் மனு வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலையிலிருந்து 4வது நிகழ்ச்சி இது. அரசின் சார்பில் வழங்கப்படும் 27 வகையான உதவிகளை பெறுவதற்கான மனுக்கள் வந்துள்ளது.

வரும் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்து மனுக்களை பரிசீலித்து உடனடியாக அதற்கு தீர்வு காண உள்ளார். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும், முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் சீரான முறையில் விநியோகிக்க திட்டங்கள் தீட்டப்பட்டு, முதல் கட்டமாக உறையூர் பகுதியில் ரூ.40 ேகாடி செலவில் பணிகள் நடக்கிறது. சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பணி நடக்கிறது. விரிவாக்கப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. எந்த அரசு வந்தாலும் நகர்ப்புறங்களில் பட்டாக்கள் வழங்கப்படுவதில்லை. மறைந்த முதல்வர் கருணாநிதி மேற்கு தொகுதியில் 1,500 பேருக்கு பட்டா வழங்கினார். அதேபோல ஸ்டாலின் முதல்வரான பிறகு, நகர்ப்புறங்களில் தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க உள்ளார். வீடு இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலமாக வீடு கட்டப்பட்டு 500 பேருக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளது. நெல்மண்டி பகுதியில் கட்டப்படும் வீடுகளும் வழங்கப்பட உள்ளது. சமயபுரம் பகுதியில் 500 வீடுகள் உள்ளது.

தேவைப்பட்டவர்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்படும். நகர்ப்புறத்தில் வீடுகள் கட்டும் திட்டத்தையும் இந்த ஆண்டு துவங்க உள்ளோம். ஏழை, எளிய மக்களை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து வழங்கும் பணியை முதல்வர் துவங்கி உள்ளார். திருச்சிக்கு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் வர உள்ளது. இதனால் 30 கி.மீ., திருச்சி விரிவடையும். போக்குவரத்து நெரிசலை குறைக்க ஹைஎலிவேட்டர் சாலை அமைக்கப்பட உள்ளது. இன்றைய முகாமில் 3,000 பேர் உள்ளீர்கள். இதில் 2,000 பேருக்காவது திட்டங்களை நிறைவேற்றத்தருவோம். திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மருங்காபுரியில் நாளை மனுக்கள் வாங்க உள்ளோம்’ என்றார்.

முன்னதாக மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் வரவேற்றார். டிஆர்ஓ பழனிகுமார், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

வெறும் காகிதம் அல்ல... எங்கள் மீதான நம்பிக்கை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ேபசுகையில், ‘நம்பிக்கையோடு மனு வழங்க வந்துள்ளீர்கள். மனுக்களை வாங்கும் பணியில் நேரடியாக முழுமையாக ஈடுபட்டுள்ளோம். என்னதான் தன்னுடைய துறை சார்பாக தமிழகம் முழுவதும் அமைச்சர் நேரு சுற்றி சுற்றி வந்தாலும், அவருடைய கவனம் முழுவதும் திருச்சி மாவட்டம் குறிப்பாக அவரது திருச்சி மேற்கு தொகுதி மக்கள் மீது உள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நீங்கள் கொடுக்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்கவில்லை. நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாக பார்க்கிறோம். கண்டிப்பாக அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு மனுவுக்கும் தீர்வு கண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. எந்த நம்பிக்கையோடு இந்த அரங்கத்துக்கு வந்தீர்களோ அதே நம்பிக்கையோடு செல்லுங்கள். இன்றிலிருந்து உங்களுடைய தேவை, கோரிக்கை, பிரச்னை எங்களுடையது. அதை தீர்த்து வைப்பது தான் எங்களது தலையாய கடமை’ என்றார்.

Related Stories: