×

திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெறவேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்டம் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், காயத்திரி தரன், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார், பொன் ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது, `நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களிடையே நமது திமுக அரசு செய்த சாதனைகளை விளக்கி 100 சதவீதம் வெற்றி பெறவேண்டும். நகர்புற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 10 பேர் இடம் பெறவேண்டும். 10 பேர்களில் இருவர் இளைஞர் அணி, இருவர் மகளிர் அணி, இருவர் தகவல்தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர் அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலில் பெயர் கொண்டவராக இருக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தங்களது விவரங்களை எக்ஸெல் சீட்டில் டிசம்பர் 31ம் தேதிக்குள் dmkcentraloffice@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமை கழகத்திலிருந்து வழங்கப்படும் அரசு செய்த சாதனைகள் அடங்கியுள்ள துண்டறிக்கையை அனைத்து வீடுகளுக்கும் நிர்வாகிகள் விநியோகிக்க வேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கொத்தியம்பாக்கம் டி.தேசிங்கு, பூவை எம்.ஜெயக்குமார், என்.இ.கே.மூர்த்தி, புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், பூவை எம்.ரவிக்குமார், ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், பொன்.விஜயன், ஜி.நாராயண பிரசாத், தி.வை.ரவி, தங்கம் முரளி, துணை தலைவர் எம்.பர்கத்துல்லாகான், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் க.பிரபு கஜேந்திரன், ஏ.ஜெ.பவுல், என்.பி.மாரிமுத்து, ஏ.ஜி.ரவி, ஒ.ஆர்.நாகூர்கனி, ப.சிட்டிபாபு, டி.கே.பாபு, வி.ஜெ.உமா மகேஷ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK government ,Minister ,Nasser ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...