×

மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றை ஆபத்தாக கடக்கும் மாணவிகள்: தரைப்பாலம் அமைத்துத்தர பொதுமக்கள் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மங்களம் கிராமத்தில் ஆரணியாற்று வெள்ளத்தில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் நடந்து செல்கின்றனர். இதனால், அவர்களது பெற்றோர் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மங்களம், பெருமாள்பேட்டை, மங்களம் கிராமம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள  செம்மண் சாலை வழியாக ஆரணிக்கு செல்கின்றனர்.

பின்னர், அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபார சம்மந்தமாகவும்  சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியது.  மேலும், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் பெய்த மழையால் அந்த மழை நீர் ஓடை வழியாக வந்து ஆரணி ஆற்றில் கலந்தது. மேலும், பிச்சாட்டூர் ஏரியில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.  

இந்த தண்ணீர் சுருட்டபள்ளி  அணைக்கட்டிற்கு வந்து தேக்கி வைக்கப்பட்டு அதன் உபரிநீர் வெளியேறி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், மங்களம், ஆரணி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கிறது.  இதில், மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலையும் மூழ்கியது. மேலும், மங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெரியபாளையம், ஆரணி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆற்றின் குறுக்கே செம்மண் சாலை வழியாக  ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

''பெற்றோர் அச்சம்''
அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் குழந்தைகள் ஆரணி ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால், எங்களுக்கு பயமாக உள்ளது. மழை நின்ற பிறகு மங்களம் கிராம ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Araniyar river ,Mangalam village ,
× RELATED மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றை...