×

வேலூர் மாவட்டத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள் பக்தியுடன் திருவெம்பாவை பாடினர்

வேலூர், டிச.21: வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவன் கோயில்களில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு நேற்று அதிகாலை பால், தயிர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 6 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபுரம் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் திருவெம்பாவை பாடல் பாடி சுவாமியை தரிசனம் செய்தனர். விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில், குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள கருப்புலீஸ்வரர் கோயில், திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் காங்கேயநல்லூர் காங்கீசர், காட்பாடி காந்தி நகர் சந்திரமவுலீஸ்வரர், பேரிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி, கொசப்பேட்டை சுந்தரேஸ்வரசுவாமி, மேல்மொணவூர் கைலாசநாதர், பள்ளிகொண்டா நாகநாதீஸ்ரர், அரியூர் ஜோதீஸ்வரர், மூஞ்சூர்பட்டு நாகநாதீஸ்வரர் என மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவலம்: காட்பாடி தாலுகா, திருவலம் பேரூராட்சியில் பொன்னை ஆற்றங்கரையோரம் தனுமத்தியம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் நடராஜ பெருமான் உடனுறை சிவகாமி அம்பாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று அதிகாலை நடராஜ பெருமான் சமேத சிவகாமி அம்பாள் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Shiva temples ,Vellore district ,Arudra ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு