×

பேயன்குழி அருகே உடைப்பு இரட்டைக்கரை கால்வாய் தண்ணீர் ஏற்ற ₹60 லட்சத்தில் ராட்சத குழாய்கள் அமைப்பு அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு

நாகர்கோவில், டிச.21: வில்லுக்குறி வழியாக பேயன்குழி பகுதிக்கு செல்லும் இரட்டைக்கரை கால்வாய் உடைப்பை, தற்காலிகமாக சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, உடைப்பு ஏற்பட்ட நீர்நிலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வில்லுக்குறியிலிருந்து பேயன்குழி வழியாக செல்லும் இரட்டைக்கரை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து மிகுந்த சேதமடைந்துள்ளது.

மேலும், இரட்டைக்கரை கால்வாய் உடைப்பால் குளங்களில் நீர் இருப்பு குறைந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக மாநில பேரிடர் நிதியிலிருந்து ₹60 லட்சம் மதிப்பில் 3 ராட்சத இரும்பு குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுப்பணித்துறை அலுவலர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதால், இரட்டைக்கரை கால்வாய் சீரமைப்பு பணி குறித்து ரயில்வே துறையினருடன் கலந்தாலோசித்து, நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பாதுகாப்பான கால்வாய் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார். செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) வசந்தி, சடையமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ், முனைவர் பசலியான், அருளானந்த ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Manothankaraj ,Bayankuzhi ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...