×

முன்பு இருந்தது போல் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நேரத்தை மாற்ற வேண்டும்

தஞ்சை, டிச.21: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தஞ்சை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் வேலை அறிக்கையை சமர்பித்தார். சிறப்பு பேரவையை ஏஐடியூசி மாநிலச்செயலாளர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்டத் தலைவர் சேவையா, போக்குவரத்து சங்க மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக் குமரன் ஆகியோர் பேசினர்.

இதில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நேரம் முன்பு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்று இருந்ததை தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி என மாற்றி அமைக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை அரசு கவனத்தில் கொண்டு டாஸ்மாக் பணியாளர்கள் பணி நேரத்தை முன்பிருந்தது போலவே மாற்றி அமைக்க வேண்டும். 18 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளில் அரசு உரிய கவனம் செலுத்தி நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக வடிவேலன், துணை தலைவர்களாக ரமேஷ், மகாராஜா, மாவட்ட செயலாளராக கோடீஸ்வரன், துணை செயலாளர்களாக சார்லஸ், திலகர், பொருளாளராக இளஞ்செழியன், நிர்வாக குழு உறுப்பினர்களாக குணசீலன், சரவணன், ஜெகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Tasmac ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்