×

திரளான பக்தர்கள் பங்கேற்பு காரைக்கால்மேடு ரேணுகாதேவி அம்மன் கோயிலில் பால்குட விழா

காரைக்கால், டிச.21: காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் உள்ள ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் பால்குட அபிசேக விழா நடைபெற்றது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தனர். 54 மீனவ கிராமங்களுக்கு பொது கிராமமான காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் உள்ளது ரேணுகாதேவி அம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமி தினத்தில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்து பாலாபிசேகம் செய்து வருகின்றனர். இந்தாண்டு, மார்கழி மாத பவுர்ணமி தினத்தன்று கோயிலில் பால்குட விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டார மீனவ கிராமங்களிலிருந்து பஞ்சாயத்தார்கள் அம்மனுக்கு பட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர். அவர்களுக்கு காரைக்கால்மேடு கிராம பஞ்சாயத்தார் சார்பில் மரியாதை செய்யப்பட்டு, அவர்கள் எடுத்த வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு பாலாபிசேகம் செய்து பட்டு சாத்தப்பட்டது. தொடர்ந்து காரைக்கால்மேட்டை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்குள்ள சித்திவிநாயகர் கோவிலிலிருந்து தலையில் பால்குடம் சுமந்து ஆஞ்சநேயர் கோவில் வழியாக ஊரை சுற்றி வலம் வந்து ரேணுகாதேவி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதுபோன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிசேகம் செய்த பால், கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சமுத்திரத்தில் கலந்து விடப்பட்டு ஊரையும், ஊர் மக்களையும் காக்கவும், மீன்பிடி தொழில் சிறந்து விளங்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காரைக்கால்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார்களும், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Milk festival ,Renukadevi Amman Temple ,Karaikalmedu ,
× RELATED மூக்குப்பீறி அய்யா கோயிலில் சித்திரை பால் முறை திருவிழா