×

சிவகாசியில் டெங்கு தடுப்பு பணியில் சுகாதாரத்துறை தீவிரம்

சிவகாசி, டிச. 20: சிவகாசியில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு கொசுப்புழு உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி என்ஜிஓ காலனியில் டெங்கு தடுப்பு பணிகள் நேற்று நடைபெற்றது.

வீடு, வீடாகச் சென்று கொசு மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துதல் போன்ற பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. இப்பணிகளை புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் பார்வையிட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். மேலும் நல்ல தண்ணீரில் முட்டையிடும். வளர்ந்த பிறகு டெங்கு, ஜிகா வைரஸ் பரப்பும் கொசுக்களாக மாறிவிடும்.

எனவே, தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். தேவையில்லாத இடங்களில் தேங்கிய உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, பழைய டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags : Health ,Sivakasi ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...