சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை திட்டம் அமல் கம்பம்மெட்டு வழியே திருப்பி விடப்படுகின்றன

கம்பம், டிச. 20: போக்குவரத்து நெரிசலைத் தடுக்க சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நேற்று முதல் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடப்படுகின்றன. சபரிமலை சீசன் தொடங்கியதையொட்டி தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், குமுளி வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை ஜன.14ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்கவும், வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் ஆண்டுதோறும் சபரிமலை சீசன் காலங்களில் தேனி மாவட்ட காவல்துறையால் ஒரு வழிப்பாதைதிட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும், தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதை திட்டம் தேனி மாவட்ட எஸ்பி பிரவின் டோங்ரே உத்தரவில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டகயம், எரிமேலி, பம்பை வழியாக சபரிமலைக்கு செல்லவும், சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக் கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியார், குமுளி, கூட லூர், கம்பம், சின்னமனூர் வழியாக தேனிக்கு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களின் வாகனங்களுக்கு வழிகாட்டவும் கம்பம் புறவழிச்சாலை சந்திப்பு, கம்பம்மெட்டு சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: