ஊரக வேலை உறுதி திட்டத்தில் விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் வேண்டும்

சிவகங்கை, டிச.20: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மூலம் தனிநபர் பொருளாதார முன்னேற்றம் பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் விவசாயத்திற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை மூலம் தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டங்கள் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து மேலும் அதிக எண்ணிக்கையில் மகளிர் குழுக்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடுதல் வேண்டும்.

நீர் மேலாண்மைத் திட்டத்தில் கண்மாய்கள், குளங்கள் சீரமைத்து கண்காணிக்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் சிவராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: