தமிழுக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர் முன்னாள் அமைச்சர் தென்னவன் புகழாரம்

காரைக்குடி, டிச.20: தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர் என முன்னாள் அமைச்சர் தென்னவன் தெரிவித்தார். காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நடந்தது. தி.க. பேச்சாளர் பிராட்லா வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், எம்எல்ஏ மாங்குடி, பேச்சாளர்கள் ராமலிங்கம், சண்முகவடிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர், முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘தமிழுக்குச் சொத்தாகவும், தமிழர்கட்கு சொந்தமாகவும், தமிழாகவே வாழ்பவர் கலைஞர். 3 லட்சம் பக்கம் எழுதியவர். பன்முக திறமை கொண்டவர். 13 முறை தேர்தலில் நின்று தோல்வி என்பதை அறியாமல் வெற்றி பெற்றவர். 50 ஆண்டுகாலம் திமுக தலைவராக இருந்து இந்தியாவில் யாருக்கும் செய்யாத வரலாற்று சாதனை படைத்தவர். இன்று கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என்றார். ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திறக்குறளுக்கு எத்தனையோ பேர் விளக்க உரை எழுதியுள்ளனர். ஆனால் கலைஞர் மிக, மிக அற்புதமாக தான் கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல், யாருடைய மனமும் புண்படாமல் விளக்க உரை எழுதியுள்ளார். இந்தியாவின் பிரதமரை உருவாக்க கூடிய அளவில் பெரிய தலைவர் கலைஞர் என்றார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப்படலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்க தமிழ்ச்சமுதாயம் கடமைப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் தமிழ்மணி குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், சின்னத்துரை, சுப்பிரமணி, முன்னாள் இளைஞரணிதுணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்ரவி, சிறுபான்மைபிரிவு மைக்கேல், பொறியாளர் செந்தில்குமார், கரைசுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நகரசெயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Related Stories: