குன்னூர், கோத்தகிரியில் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோத்தகிரி,டிச.20:  கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில்  ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். தற்போது பருவமழை பெய்து முடிந்த நிலையில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவி மாலை 3 மணி முதல் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதனால் கடும் குளிர் நிலவி பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னேற்பாடாக தேயிலை தோட்ட விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் தேயிலை செடிகளை பாதுகாக்கும் வகையில் நீர் தெளிப்பான் போன்ற கருவிகள் மூலம் பணப்பயிரான தேயிலையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னூர்: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கடும் பனி மூட்டம் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீர் பனி நிலவி வருகிறது. குன்னூர், அருவங்காடு, உபதலை, ஓட்டுப்பட்டரை, காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுகிறது. கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக ஆறு மற்றும் ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை ஓய்ந்த நிலையில் தற்போது நீர் பனிவிழ துவங்கியுள்ளது. இதனால், கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அதிகாலை நேரத்தில் வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு பயணம் செய்கின்றனர்.

கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் அலுவலக பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: