ஈரோட்டில் உலகத்தரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை

ஈரோடு,டிச.20: ஈரோட்டில் உலகத்தரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வும் கொமதேக பொதுச் செயலாளருமான ஈ.ஆர். ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

இதில், ஈரோடு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கோபியைத் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும். காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்காலில் சாயக் கழிவுகள் கலந்து விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்தியூர் பகுதிக்கு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட 141 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:

இக்கூட்டத்தில் கொமதேக சார்பில் 8 மாவட்டங்களை உள்ளடக்கி 141 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தலின்போது அறிவித்த 505 வாக்குறுதிகளில் சுமார் 300 வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.  ஈரோடு, சோலார் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புற நகர் பேருந்து நிலையம் அமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதேபோல கனி ராவுத்தர் குளம் பகுதியிலும் ஒரு புற நகர் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் குறிப்பிட்டதைப் போல 2031க்குள் நமது மாநிலம் குடிசை இல்லா மாநிலமாக்கப்படும். அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே போல தீரன் சின்னமலையின் தளபதி  பொல்லானுக்கும் சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், திமுக நகரச் செயலாளர் மு.சுப்பிரமணி, நெசவாளர் அணிச் செயலாளர். எஸ்.எல்.டி. ப.சச்சிதானந்தம் மற்றும் கொமதேக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: