பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

பட்டுக்கோட்டை,டிச.20: பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையினை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர், தஞ்சை மாவட்ட கலெக்டர், தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரது வழிகாட்டுதலின்படி 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்தான விழிப்புணர்வு கூட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் சுப்பையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்கம் மற்றும் நகர வணிகர் சங்க பேரமைப்பு பிரதிநிதிகள், ரோட்டரி மற்றும் அரிமா சங்க பிரதிநிதிகள், ஓட்டல் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், மளிகை கடை உரிமையாளர்கள், மண்டப உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, கண்டியன்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சுப்பையன் பேசுகையில், பிளாஸ்டிக் இல்லாத பட்டுக்கோட்டை நகரம் என்பதனை முழுமையாக செயல்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். எனவே வர்த்தக நிறுவனத்தினர் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்கள் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தி நகராட்சி நிர்வாகத்தினரால் அபராதம், பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தொடர் நிகழ்வுகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும். மேலும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தங்கள் கடையின் முன்புறம் பிளாஸ்டிக் பை தடை செய்யப்பட்டுள்ளது என்று வாசகம் கொண்ட பதாகைகள் வைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஆரோக்கியசாமி, ரவிச்சந்திரன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார அலுவலர் நெடுமாறன் நன்றி கூறினார்.

Related Stories: