தா.பழூரில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடும் தண்ணீர் கழிவு நீர் கலப்பதால் நோய் தொற்று அபாயம்

தா.பழூர்,டிச.20: தா.பழூர் சிவன் கோயில் தெருவில் சுமார் 3 மாதகாலமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குழாய் தா.பழூர் சிவன் கோயில் தெரு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக கன மழையால் கொள்ளிடத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது மீண்டும் தண்ணீர் குடிநீர் வினியோகம் செய்ய திறந்து விடப்பட்ட நிலையில் உடைப்பில் இருந்து தண்ணீர் வீணாக வெளியாகி வருகிறது. மேலும் இந்த தண்ணீர் அப்பகுதியில் குளம் போல் தேங்கி அழுக்காக மாறி உள்ளது. இதனால் அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் செல்வதும் சிரமமாக உள்ளது. இந்த சேரும் சகதியுமாக உள்ள சாலையில் துவக்கப்பள்ளி மாணவர்கள் தடுமாறி சென்று வருகின்றனர். இந்த அழுக்கு நீரானது குழாய் வழியாக மீண்டும் உள்ளே சென்று பொதுமக்கள் பயன்படுத்த கூடிய நீரில் கலந்து விடுகிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் உடனடியாக இந்த உடைப்பை சரி செய்து பொது மக்கள் சுத்தமான நீரைப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: