×

மேட்டுமருதூரில் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம் இடித்து அகற்றம்

குளித்தலை, டிச.20: நெல்லை பள்ளியில் கழிப்பறை கட்டிடம் இடிந்து 3 மாணவர்களை உயிர்பலி வாங்கிய சம்பவத்தின் எதிரொலியாக தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையின்பேரில் குளித்தலை அருகே மேட்டுமருதூரில் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. நெல்லையில் பள்ளி கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் மிக மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அவற்றை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்த கட்டிடங்களாக இருந்தால் உடனடியாக தேர்வு செய்து அதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் உத்தரவின்படி கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பழமையான, சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணியில் துறை அதிகாரிகள் ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக 18 பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பல ஆண்டுகளாக மேற்கூரைகள், தரைத்தளம் சேதமடைந்து காணப்பட்டதை தொடர்ந்து குளித்தலை வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றப்பட்டது.

Tags : Anganwadi ,Mettumarthur ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்