×

திருவாதிரை திருவிழா நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

நெல்லை,டிச.20: நெல்லையப்பர் கோயில் திருவாதிரை திருவிழாவில் இன்று ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.  9ம் நாளான நேற்று சுவாமி  சந்திரசேகரர், பவானி அம்பாள் செப்பு தேரில் ரதவீதி வலம் வரும் வைபவம் நடந்தது. நெல்லை டவுனில் உள்ள சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடர்ந்த 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 12ம் தேதி முதல் 19ம் தேதிவரை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு பெரிய சபாபதி முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடராஜர் திருநடன தரிசன தீபாராதனை நடைபெற்றது. 9ம் திருவிழாவையொட்டி நேற்று காலையில் செப்பு தேரில் சந்திரசேகரர், பவனி அம்பாள் ரதவீதி உலா நடந்தது. இதைத்தொடர்ந்து திருவாதிரை திருவிழாவான இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையில் பசு தீபாராதனையும், இதன்பின் 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடராஜர் திருநடன தீபாராதனை ஆருத்ரா தரிசனமும் நடந்தது. தச்சநல் லூர் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம், நடராஜருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். காலை 6 மணிக்கு  பசு தீபாராதனையும், அதைத்தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். இதேபோல் மாநகரில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் இன்று ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

Tags : Arutra Darshan ,Thiruvathirai ,Festival ,Nellaiyappar Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...