சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சுசீந்திரம், டிச.20:  சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நேற்று காலைதேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 11ம் தேதி   கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.  தினமும் காலை, மாலை சுவாமி திருவீதியுலா   வரும் நிகழ்ச்சிகள்  நடந்து  வருகிறது. 9ம்  நாள் திருவிழாவான நேற்று அதிகாலை கலசபூஜை நடந்தது.   தொடர்ந்து 4 மணிக்கு கங்காள  நாதர் பிச்சாடனராக  திருவீதியுலா  நடந்தது. காலை 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர்   தேர், அம்மன் தேர், சுவாமி தேர்களில் 3 சுவாமிகளும் எழுந்தருளினர்.   தொடர்ந்து 8.50 மணிக்கு திருத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி   நடந்தது.

நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்பி, எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம்,   எம்.ஆர்.காந்தி, கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர் ஆகியோர் கலந்து   ெகாண்டு வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பெண் பக்தர்கள் அம்மன் தேரையும், விநாயகர் மற்றும் சுவாமி தேர்களை ஆண்   பக்தர்களும் இழுத்தனர். ேதரோட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளி   மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாண்டனர். கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள்   வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

தொடர்ந்து   இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை, 11 மணிக்கு  ரிஷப  வாகனத்தில் சுவாமியும்,   அம்பாளும் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு   சப்தாவர்ண காட்சி நடந்தது. இந்த காட்சியை வயதானவர்கள் கண்டால் மோட்சம்    கிடைக்கும். திருமணமான தம்பதிகள் கண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்    என்பது  ஐதீகமாகும். 10ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு  நடராஜர்    மூர்த்திக்கு அஷ்டாபிஷேகம், ஆருத்ர தரிசனம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு    நடராஜர் திருவீதியுலா, 9 மணிக்கு திரு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

தேரோட்ட  நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு    ஒன்றிய திமுக செயலாளர் தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன்,  தலைமை   செயற்குழு உறுப்பினர் சாய்ராம், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு  உறுப்பினர்   பூதலிங்கம்பிள்ளை, மதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன்,  அதிமுக மாவட்ட   விவசாய அணி பொருளாளர் ஆறுமுகம், நாகர்கோவில் ஆர்டிஓ  சேதுராமன்,   அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கோயில்களின் கண்காணிப்பாளர் செந்தில்குமார், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், சுசீந்திரம் கோயில்    மேலாளர் ஆறுமுகதரன்,  கணக்கர்  கண்ணன்,  சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் கதிரேசன்,  எஸ்எம்எஸ்எம் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்  கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்க பொறுப்பாளர்கள் உட்பட பலர்    கலந்து கொண்டனர்.

தேர்களை வலம்வந்த கருடன்

சுசீந்திரத்தில்  3 தேர்களும் நான்கு ரத  வீதிகளையும் சுற்றி வந்தன. முதலில் விநாயகர் தேர் 12.00 மணிக்கு நிலைக்கு  வந்தது. தொடர்ந்து 12.20 மணிக்கு தாணுமாலயன் சுவாமி தேரும், 12.40 மணிக்கு  அம்மன் தேரும் நிலைக்கு வந்து சேர்ந்தன. தொடர்ந்து சுவாமிகளுக்கு  சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகள் தேரில் இருந்து  கொண்டு வந்த தீபத்தில் கோயில் முன்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சுவாமி  தேரில் வைக்கப்பட்டிருந்த தங்க குடத்திற்கு பக்தர்கள் காணிக்கை  செலுத்தினர். இது மரபுப்படி நடக்கும் நிகழ்ச்சியாகும். பின்னர் வாள்,  கேடயம் ஏந்திய நிலையில் சுவாமி, அம்பாள், விநாயகர் விக்ரகங்கள் கோயில்  உள்பிரகாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக வடக்கு ரத வீதியில் தேர்  வலம் வந்தபோது, வானத்தில் கருடன் 3 முறை சுவாமி ேதர் உள்பட 3 தேர்களையும்  சுற்றி வந்தது. இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

மரக்கிளை அகற்றம்

தேர் தெற்கு ரத வீதிக்கு சென்றபோது, தெருவோரம் நின்ற ஒரு வேப்பமரத்தின் கிளை   தேர் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து மரக்கிளையை அகற்ற முடிவு  செய்யப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டு  மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் தாமதத்திற்கு பின்  மீண்டும் தேர் புறப்பட்டது.

Related Stories: