சென்னை-அரக்கோணம்-கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில்சேவை அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: கொரோனா தொற்று வேகமாக பரவியபோது பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டன. அப்போது, ரயில்வே ஊழியர்கள், அரசு மற்றும் முன்களப் பணியாளர்களுக்காக மட்டும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில்  கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மின்சார ரயில் சேவை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. சென்னை - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி இடையேயும், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையேயும்,  கடற்கரை- செங்கல்பட்டு இடையேயும் என 4 வழித்தடங்களில் வார நாட்களில் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பயணிப்பதால் 670க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையடுத்து ரயில் சேவையின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, 552 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பண்டிகை காலம் என்பதால் புத்தாடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு குடும்பத்துடன் பொதுமக்கள் வெளியில் செல்லும் நிலையில், ஞாயிற்றுக் கிழமைகளில் குறைவான ரயில்கள் இயக்கப்படுதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதுடன், கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே, சென்னை மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் வழித்தடங்களில் கூடுதல் மின்சார ரயில்கள்  இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை- அரக்கோணம் வழிதடத்தில் 61 ரயில்களும், சென்னை மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி  மார்க்கமாக 14 ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரக்கோணம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு- வேளச்சேரி ஆகிய வழித்தடலங்களில் 552 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 75 ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்றும், இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் 627 மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: