சென்னை மாநகர எல்லைக்குள் குட்கா விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல்: 11.66 டன் புகையிலை பொருள் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கினர். தொடர்ந்து காவல் துறை சார்பில் சென்னையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும், சம்மந்தப்பட்டை கடைகள் மீது சென்னை மாநகர முனிசிபல் சட்டத்தின்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில், சென்னை மாநகர எல்லைக்குள் பல்வேறு பகுதிகளில் காவல் துறை சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, சுமார் 11.66 டன் குட்கா, ஜர்தா, ஹான்ஸ் உட்பட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விதிமுறைகளுக்கு மாறாக தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. எனவே சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: