×

நெல்லை மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

நெல்லை, டிச. 18: நெல்லை மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உர விற்பனை நிலையங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஏதுவாக அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விலை பட்டியல்கள் விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும்.  உரங்கள்  உர விற்பனை முனையக்கருவி மூலம் முறையாக விற்பனை செய்யப்பட வேண்டும்.

தற்போது பொட்டாஷ் உர மூட்டையின் விலை ரூ.1700/- என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம்  கடந்த 8ம் தேதிக்குப்பின் புதிதாக வந்துள்ள பொட்டாஷ் உரத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டையினை மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ளபடி ரூ.1040/- என்ற விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகளை ரூ.1040/-க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை உறுதி செய்திட மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் உரக்கடைகளில் யூரியா போதிய அளவு இருப்பு உள்ள நிலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யாமல் பதுக்கிக் கொண்டு யூரியா இருப்பு இல்லை என தெரிவிப்பதாக விவசாயிகளிடம் இருந்து புகார்கள் வரப் பெற்றால் சம்பந்தப்பட்ட உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கண்காணிப்பு குழுவின் ஆய்வில் பழைய பொட்டாஷ் உர மூட்டைகள்  ரூ.1040/-க்கு கூடுதலாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், உர விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.          

Tags : Co ,Nellai ,
× RELATED பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை...