×

கண்மாய்க்கு செல்லும் நீரை தடுத்ததால் கிராமத்தினர் மறியல் நரிக்குடி அருகே பரபரப்பு

காரியாபட்டி, டிச. 18: நரிக்குடி அருகே உள்ள சேதுராயனேந்தல் கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பெரியகண்மாய்க்கு அருகே உள்ள மறையூர் மற்றும் மாயலேரி கண்மாய்களில் இருந்து வரக்கூடிய உபரிநீரை அந்தந்த ஊர் மக்கள் மணல் மூட்டைகள் கொண்டும் கான்கிரீட் கற்கள் கொண்டும் அடைத்து விட்டனர். இதனால் சேதுராயனேந்தல் பகுதிக்கு வரக்கூடிய உபரி நீர் வராமல் கண்மாய் வறட்சியாக காணப்படுகிறது. இதனால் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக தண்ணீர் இல்லாமல் இருப்பதால் விவசாயம் செய்ய இயலவில்லை என பொதுமக்கள் நரிக்குடி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சேதுராயனேந்தல் கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் நின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை டிஸ்பி சகாயஜோஸ், தாசில்தார் முத்துகிருஷ்ணன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ப.பா போஸ்தேவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் போலீசார் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் இயக்கினர். பின்பு இரு கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சாலைமறியலில் சேதுராயனேந்தல் கிராமமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். கண்மாய்க்கு தண்ணீர் வராமல் போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் கிருதுமால் நதியில் இருந்து மறையூர் கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாயில் தண்ணீர் கொண்டுவந்து மறுகால் மூலமாக சேதுராயனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் இரு கிராம மக்களிடையே பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

'காவல்நிலையம் முற்றுகை'
அப்போது அந்த வழியில் வந்த மறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவஇளங்கோவனை சேதுராயனேந்தல் பொதுமக்கள் தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த மறையூர் கிராமமக்கள்  நரிக்குடி காவல்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Narikkudi ,Kanmai ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...