கணவர் மரணத்திற்கு காரணம் என பொய் புகார் அளித்து மிரட்டும் மாமனார்: திண்டுக்கல் எஸ்பியிடம் இளம்பெண் புகார்

திண்டுக்கல், டிச. 18: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பெத்தானியா தெருவைச் சேர்ந்த போஸ்துரை மகள் சிபியா (27). திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த இன்பராஜ் மகன் அருண்குமார், வெளிநாட்டில் வேலை செய்வதாக, கடந்த 5 வருடங்களுக்கு முன், என்னை திருமணம் செய்தார். அதன்பின் 3 மாதம் சென்னையில் வசித்தோம். அப்போது வெளிநாட்டில் வேலை செய்யாமல் என்னை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. மேலும், கணவர் மதுவுக்கு அடிமையானார். இதையடுத்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறேன். கடந்த நவ.26ந் தேதி எங்கள் வீட்டிற்கு வந்த அருண்குமார், தன்னோடு வாழ வேண்டும் என்று கூறி குடிபோதையில் விஷம் குடித்ததாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தோம். போலீசார் கணவரை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அருண்குமார் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில், அருண்குமார் தந்தை இன்பராஜ் எங்கள் குடும்பத்தினர்தான் மகனின் தற்கொலைக்கு காரணம் என பொய் புகார் அளித்து மிரட்டி வருகிறார். என்னை ஏமாற்றி திருமணம் செய்து, என்னுடைய நகைகளை அபகரித்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன், நிலக்கோட்டை டிஎஸ்பி விசாரிக்க உத்தரவிட்டார்.

Related Stories: