×

பட்டா மாற்றத்தில் குளறுபடி கண்டித்து சார்பதிவாளர் அலுவலகம் முன் விவசாயி தர்ணா: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, டிச.18: தண்டராம்பட்டு அருகே பட்டா மாற்றத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி சார்பதிவாளர் அலுவலகம் முன் விவசாயி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் ஊராட்சியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி(65). அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை, உறவினர் பிச்சைக்காரன் மகன் பிரபு என்பவருக்கு, முந்ைதய தானிப்பாடி சார்பதிவாளர் பத்திரவுப்பதிவு செய்து தந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இந்த தகவலையறிந்த கிருஷ்ணமூர்த்தி சார்பதிவாளர் கஸ்தூரியிடம் சென்று கேட்டபோது, அதனை சரி செய்து உங்களது பெயரில் பட்டா மாறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாராம். ஆனால், கடந்த 2 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். தற்போது அவர் வந்தவாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிடமாறுதல் பெற்றுச்சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தனது மகன் ராஜ்குமாருடன் தானிப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, சார்பதிவாளர் கஸ்தூரி பணியிடமாற்றம் பெற்று சென்றுள்ளதை அறிந்து ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து, பத்திரப்பதிவில் நடந்துள்ள குளறுபடியை சரி செய்து தரக்கோரி சார்பதிவாளர் அலுவலகம் எதிரே இருவரும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த தற்போதைய சார்பதிவாளர் தாமோதரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிருஷ்ணமூர்த்தி, உங்களுக்கு முன்னால் இருந்த சார்பதிவாளர் எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பக்கத்து நிலத்துக்காரருக்கு பத்திரப்பதிவு செய்து தந்துள்ளார். அதனை சரி செய்து தருவதாக கூறி வந்தவர், தற்போது இங்கு பணியில் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கு சார்பதிவாளர், மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளியுங்கள். அதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதையேற்று போராட்டத்தை கைவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த போராட்டத்தால் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் ஒருமணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags : Tarna ,Dandarambattu ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...