×

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி

பெரம்பலூர்,டிச.18: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கியது. இதில் கலெக்டர் வெங்கட பிரியா, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையில் 2021-2022ம் ஆண்டுக்கான கரும்பு அரவைப்பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர்  வெங்கட பிரியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியும் மாவட்ட வருவாய் அலுவலருமான ரமேஷ் வரவேற்றார். தலைமை கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணை தலைமை ரசாயனர் பெரியசாமி, துணை தலைமை பொறியாளர் (பொ) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரிட்டோ, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி மற்றும் பொறியியல், ரசாயண பிரிவு, கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நடப்பு ஆண்டில் 3 லட்சம் டன் அரைப்பது என திட்டமிடப்பட்டுள்ளது. அரவை நாள் 107 நாள் எனவும், ஒரு நாளைக்கு 2,542 டன் அரைப்பது எனவும், இந்த ஆண்டில் 2,20,000 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சர்க்கரை கட்டுமானம் 9.5சதவீதம் கொண்டு வருவது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.150 வழங்குவதற்கு ரூ.138.83 கோடி அனுமதி அளித்து 6-12-2021 அன்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் 2021-2022ம் ஆண்டுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.2900 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். தொடக்க விழாவில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur Sugar Mill ,
× RELATED பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரவைப் பணி இன்று துவக்கம்