×

நாகை ஒன்றிய பகுதியில் வளர்ச்சித் திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

நாகை, டிச.18: நாகை ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி பணிகளையும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்தும் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். நாகை ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சி நல்லமுத்து முதலியார்தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.8.69 லட்சம் மதிப்பில் வடிகால் வசதி அமைக்கப்பட்ட பணிகளையும், எஸ்டிஆர்எம்கே தெரு சாலையை ரூ.4.91 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணியினையும், ஆழியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.99 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து குற்றம்பொறுத்தானிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.42 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நடந்து வரும் கட்டுமான பணிகளையும், தேமங்கலம் ஊராட்சி புலியூர் சுடுகாடு சிமெண்ட் சாலை மற்றும் ரூ.28 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். நாகை சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து நாகை நகராட்சிக்கு உட்பட்ட காடம்பாடி சவேரியார் கோவில் தெருவில் உள்ள நியாயவிலைக் கடை மற்றும் நாகூர் புதுமனை தெருவில் உள்ள சிறு கூட்டுறவு சிறப்பங்காடியிலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Naga Union Territory ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...