×

குளித்தலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தார், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி

குளித்தலை, டிச. 18: குளித்தலை நகரத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மண்சாலைகளை தார் சாலை, பேவர் பிளாக் சாலையாக மாற்றி அமைக்கும் பணியை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தார் சாலை, சிமெண்ட் சாலைகள் அல்லாமல் பல வார்டு பகுதிகளில் மண் சாலைகள் அதிகம் உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மண் சாலைகளாக உள்ள பகுதிகளில் தார் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின்கீழ் நகராட்சி எல்லைக்குட்பட்ட மண் சாலைகளாக உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து அப்பகுதிகளில் தார்சாலையாகவும், பேவர் பிளாக் சாலையாக மாற்றம் செய்வதற்கு ஒரு கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியினை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் சுப்புராம், நகராட்சி பொறியாளர் ராதா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் பல்லவி ராஜா, நகர பொருளாளர் தமிழரசன், செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி அருண்மொழி, தொகுதி பொறுப்பாளர் வி.பி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kulithalai ,
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்