நாகர்கோவிலில் வீடுகள் நிறைந்த தெருவில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட்ட அம்மாசிமட தெருவில் உள்ள குடியிருப்போர் சார்பாக, அந்த பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மீனாட்சிபுரம் அம்மாசிமட தெரு, ஆசாரிமார் தெற்கு தெரு, பத்தல்விளை, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகம் ஆகும். 500க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் அம்மாசிமட தெருவில் உள்ள ஒரு வீட்டில், தனியார் நிறுவனம் செல்போன் டவர் நிறுவும் பணியை மேற்ெகாண்டு வருகிறார்கள். செல்போன் டவரால் பல்வேறு வித பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கதிர்வீச்சால் கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிப்படுகிறார்கள். வீட்டின் மாடியில் அமைக்கப்படும் இந்த செல்போன் டவரால், ஏதாவது விபரீதங்கள் நிகழ்ந்தால் பெரும் சேதம் ஏற்படும். பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். தற்போது எங்கள் தெருக்களில் உள்ள மரங்களில் பறவைகள் வந்து அமர்ந்து செல்கின்றன. செல்போன் டவர் அமைக்கப்படும் போது, ஏற்படும் கதிர்வீச்சுகள் பறவைகளையும் பாதிக்கும். எனவே மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.  இவ்வாறு கூறி உள்ளனர். இதே போல் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

Related Stories: