அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் டவுசர், சட்டையை கழற்றாமல் விடமாட்டோம்

விழுப்புரம், டிச. 18: தமிழகத்தில் எந்த ஆட்சியும் நிரந்தரமில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சட்டையை கழற்றாமல் விடமாட்டோம் என்று சி.வி சண்முகம் பேசியுள்ளார்.  விழுப்புரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையத்தில் நடந்தது. இதில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது: தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தமிழகத்தில் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, 10 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தநிலையில், அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுவரை தொடங்கப்படவில்லை.

தமிழகத்தில் மாரிதாசை கைது செய்யும் காவல்துறை, தமிழக டிஜிபி குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய தைரியம் இருக்கா?. ஆனால், டிஜிபி சைக்கிள் ஓட்டப்பந்தயம் வேலையை மட்டும் செய்து வருகிறார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையை வைத்து அதிமுகவை முடக்க நினைக்கிறார்கள். நேற்று ஒருவழக்கு, எங்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணிமீது வழக்கு போட்டிருக்கிறார்கள். முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், கிரிப்டோ கரன்சி முதலீடு செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி தெரிவித்துள்ளார். நான் கேட்கிறேன், கிரிப்டோ கரன்சிக்கு தமிழகத்தில், இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டிருக்கிறதா? இப்போதுதான் இதனை நெறிமுறைப்படுத்த பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் சட்டம் கொண்டு வரவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் லஞ்ச ஒழிப்பில் உள்ள அதிமேதாவி தலைவர் வழக்குபோட்டு இதனை சொல்லியிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன்.

இவர் பணம் வைத்திருந்தை கண்ணால் பார்த்தாரா? என்று கிழி, கிழியென்று கிழித்துவிடுகிறேன். டவுசரை கழட்டிவிடுகிறேன்.  லஞ்ச ஒழிப்பு போலீசார் நேர்மையானவர்களா? உத்தமரா? காந்தியின் பக்கத்துவீடா அவர்கள். உயர்அதிகாரிகள் வரை அவர்கள், யாரிடமும் கைநீட்டி காசு வாங்குனது கிடையாதா, எப்படி அவர்கள் வீடுகட்டினார்கள், லஞ்சஒழிப்பு தலைவர், இதற்கு முன் டிஎஸ்பி, எஸ்பியாக இருந்தபோது சொத்துமதிப்பு என்ன?. பீரியடு முடிந்து செல்லும்போது சொத்து மதிப்புஎன்ன?. இதற்கு முன் காவல்நிலையங்களில் சட்டம் ஒழுங்கு போலீசாராகத்தான் வேலை செய்தார்கள். அப்போது, திருடர்களை மடக்கி மாமூல் வாங்குனது கிடையாதா?. 2 வீடுகளை கட்டியுள்ளார்கள்.

தமிழகத்தில் எந்த ஆட்சியும் நிரந்தரம் கிடையாது. நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு வரும். அப்போது, அவர்களின் சொத்து என்னவென்று நாங்கள் ஆய்வுசெய்வோம். இதே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களின் வீட்டிற்கும் சோதனைக்கு செல்வார்கள். அப்போது அவர்களின் சட்டையை கழட்டாமல் விடமாட்டோம். அப்போது கிரிப்டோ கரன்சி இல்லை, புதுகரன்சியை நாங்கள் ரிப்போர்ட்டாக எழுதுவோம். உங்களை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணிவீட்டிற்கு ரெய்டுக்குச் சென்ற போலீசார், பெண்களின் உள்ளாடைகள் குறித்தும் சோதனை செய்து வெளியிட்டுள்ளனர். சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தும் வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடந்து கொண்டுள்ளனர். சட்டத்திற்குட்பட்டு எந்த சோதனை வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கான பணியில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: