புதுச்சேரியில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி, டிச. 17: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கம் மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே மத்திய அரசுடன் நடந்த 2 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தேசிய வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி நேற்று நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பாரதி பூங்கா அருகிலுள்ள யூகோ தலைமை வங்கி முன்பு 120க்கும் மேற்பட்டோர் திரண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்வீனர் முரளிதரன் தலைமை தாங்கினார். சுந்தரவரதன், கருணாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

புதுச்சேரியில் 1,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளதால் வங்கியில் பண பரிவர்த்தனை சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டன.

பெரும்பாலான வங்கிகளில் ஆள் நடமாட்டமின்றி இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஏடிஎம் மையங்களில் கூட்டம் நிரம்பிய நிலையில் அங்கும் பணமில்லாமல் வாடிக்கையாளர்கள் ஆங்காங்கே அவதிப்பட்டனர். நாளையும் வங்கி பணிகள் எதுவும் நடைபெறாது என்று வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.500 கோடி வரையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இன்றும் போராட்டம் தொடரும் என்பதால் ஏடிஎம் சேவையும் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Related Stories: