×

அனுப்பர்பாளையத்தில் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருமுருகன்பூண்டி, டிச.17:  திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் 15 வேலம்பாளையம் நகர பகுதிக்குட்பட்ட 11, 12, 13, 14, 24 மற்றும் 25 ஆகிய வார்டு பகுதிகளில் சாக்கடை கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். வீடு, பொதுக்குழாயில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சாலைகளை செப்பனிட வேண்டும். வீட்டுமனை வரன்முறை மற்றும் கட்டிட அனுமதி உரிமக் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்திருப்பதை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பாக பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள 1வது  மண்டல அலுவலகம் முன்பு நடந்தது.

15 வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நந்தகோபால், முன்னாள் நகர செயலாளர் சுப்ரமணியம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணியம், முன்னாள் கவுன்சிலர்கள் பாபு, விஸ்வநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பெண்கள் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் சென்று 1வது மண்டல உதவி ஆணையர் சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அப்போது, வேலம்பாளையம் நகரத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நேரடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். குடிநீர் மற்றும் சாக்கடை பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், சாலை சரி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும் என்றும் அடுத்த வாரம் நேரில் அனைத்து வார்டுகளையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையர் சுப்ரமணியம் உறுதி அளித்தார்.

Tags : Anupparpalayam ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...