×

நகராட்சியானது கருமத்தம்பட்டி பேரூராட்சி

சோமனூர், டிச. 17: கருமத்தம்பட்டி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் இன்று பொறுப்பேற்கிறார்.  கருமத்தம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதிக வரி வருமானம், மக்கள் தொகையின் அடிப்படையில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைப்பதில் பல்வேறு கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கணியூர் ஊராட்சி, கிட்டாம்பாளையம் ஊராட்சி, கரவளி மாதப்பூர் ஊராட்சி, செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஆகிய நான்கு ஊராட்சிகளை நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து எந்த ஒரு ஊராட்சியையும் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இணைக்காமல் தனி ஒரு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள நகராட்சியின் கீழ் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு கருமத்தம்பட்டி புதிய நகராட்சிக்கு ஆணையர் இன்று பொறுப்பேற்கிறார். இந்நிலையில் இன்று முதல் கருமத்தம்பட்டி பேரூராட்சி நகராட்சியாக செயல்படும். கருமத்தம்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த கலையரசி இருகூர் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் இன்று புதிய நகராட்சி ஆணையர்  பொறுப்பேற்ற பிறகு நகராட்சி நிர்வாகத்திற்கு உண்டான பல்வேறு துறைகள் ஒதுக்கப்படும், அந்த துறைகளுக்கு உண்டான அதிகாரிகள் விரைவில் பொறுப்பு ஏற்பார்கள் என்று அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karumathampatti ,
× RELATED கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா