×

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சனைக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர்,டிச.17: பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களது பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (17ம்தேதி) சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022 பொங்கலுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்“ என்ற தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமில் நில அளவை (புல) எண்கள், உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார், காப்பாளர் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை குறித்த திருத்தம், மேற்குறிப்பிட்ட சில கலங்கள் பதிவுகளின்றி (வெற்றாக) இருக்கும் இனங்கள், ஒரு பட்டாதாரரின் பரப்பு, பெயர், பக்கத்து நிலத்தின் பட்டாதாரரின் விவரங்களுடன் (ஒன்றின் இடத்தில் மற்றொன்று மாறியிருக்கும் இனங்கள்) குறித்த மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று (17ம்தேதி) பெரம்பலூர் வட்டத்தில் லாடபுரம் (கி), லாடபுரம் (மே) வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு லாடபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடக்கிறது. வேப்பந்தட்டை வட்டத்தில், அனுக்கூர், பிரம்மதேசம் வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுக்கூர் சமுதாயக் கூடத்திலும், குன்னம் வட்டத்தில் சிறுமத்தூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறுமத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடக்கிறது. ஆலத்தூர் வட்டத்தில் மேலமாத்தூர், அழகிரிபாளையம், தொண்டபாடி வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மேலமாத்தூர் ராஜிவ்காந்தி சேவா கேந்திரா மைய கட்டிடத்திலும் இம்முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Patta ,Perambalur district ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி