திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் கல்யாணசுந்தரர், பார்வதி ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி

திருவாரூர், டிச.17: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயிலில் வரும் 20ம் தேதி பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறு வதையொட்டி நீலோத்தம்பாள் சன்னதி அருகே பந்தகால் நடும் பணி கடந்த 9ம்தேதி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 11ந் தேதி முதல் தினந்தோறும் அருள்மிகு மாணிக்கவாசகர் ராஜ நாராயணன் மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அறநெறியார், நீலோத்தம்பாள் மற்றும் வன்மீகநாதர் சன்னதிகளில் திருவெம்பாவை ஒப்புவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. மேலும் கல்யாணசுந்தரர் பார்வதி மற்றும் சக்கரவார அம்மன் தினசரி ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. நேற்று 6வது நாளாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (18ந் தேதி) இரவு தியாகராஜர் தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ராஜநாராயணன் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 19ம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. 20ம்தேதி அதிகாலை தியாகராஜபெருமான் பதஞ்சலி வியாக்கரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் நடராஜ பெருமான் வீதிஉலா நடைபெற்று சபாபதி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: