×

36 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு ஆப்ரிக்காவில் இருந்து ஆரணிக்கு வந்த


ஆரணி, டிச.17: மத்திய ஆப்ரிக்க நாட்டில் இருந்து ஆரணிக்கு வந்த 36 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் அறிகுறி இருந்ததால், அவரை தனிமைப்படுத்தி மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்தவரின் 38 வயது மகள், மத்திய ஆப்ரிக்காவின் கபோன் நாட்டில் உள்ள காங்கோ நகரத்தில் தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி அந்த பெண் தனது கணவர் மற்றும் மகனுடன் ஆரணி அடுத்த பையூருக்கு வருவதற்காக, காங்கோ நகரத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.

ஆப்ரிக்க நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கபோன் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த குடும்பத்தினரை கண்காணிக்க, சென்னை சுகாதாரத்துறை சார்பில் ஆரணி எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில், கடந்த 14ம் தேதி அந்த பெண், அவரது கணவர் மற்றும் மகனுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானதில், 36 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே, உடனடியாக அவரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார்.

மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் சிறப்பு வார்டில், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றைவிட 4 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒமிக்ரான் வைரஸ் என கூறப்படுவதால், சிறப்பு வார்டு பகுதியில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா ெதாற்று உறுதியாகியிருக்கிறது.

அதோடு, ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறிகளும் காணப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தவர் என்பதால், முன்னெச்சரிக்கையாக அவரை ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதித்திருக்கிறோம். மேலும், ஒமிக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறியும் பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். மூன்று அல்லது நான்கு நாட்களில் பரிசோதனை முடிவு தெரியவரும். அதன்பிறகே, ஒமிக்ரான் தொற்று உள்ளதா அல்லது கொரோனா தொற்று மட்டும்தானா என்பது உறுதி செய்யப்படும் என்றனர்.

Tags : Arani ,Africa ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...