பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மமன் கோயிலில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பவானி அம்மன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவதுண்டு. திருவிழாக்களின்போது பெருமளவில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் நடந்த இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையின்போது, முதல்வர் ஆலோசனைப்படி, ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், கோயிலில் உள்ள அன்னதான கூடம், விருந்துண்ணும் மண்டபம், வேப்பஞ்சேலை செலுத்தும் இடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், காலணி பாதுகாக்கும் இடம், பழைய கோசாலைகள் புதுப்பித்தல், புதிய கோசாலைகள் அமைத்தல்,  சாமி படங்கள் விற்குமிடம், மற்றும் நேர்த்திக் கடனை நிறைவேற்ற வரும் பக்தர்கள் இரவு தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவை போன்ற பணிகள் பக்தர்களின் வசதிக்காக தொடங்கப்பட உள்ளது. அந்த பணிகள் தொடக்க நாளாக அமைந்துள்ளது. விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்று, அனைத்து வசதிகளை உள்ளடக்கிய திருக்கோயிலாக பவானி அம்மன் கோயில் அமைந்திடும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். அப்போது, இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையாளர் குமரகுருபரன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கோயில் பரம்பரை அறங்காவலர் சேதுரத்தினம்மாள், அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: