12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கலை ேபாட்டிகள்

திருச்சி, டிச.16: இந்திய தேர்தல் ஆணையம் 12வது தேசிய வாக்காளர் தினத்தினை வரும் 25.01.2022 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு “SVEEP Contest 2022” என்ற தலைப்பில், 9-12ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தவறிய மாணவ, மாணவிகள் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்த உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ‘ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்காளராக பதிவு செய்தல், வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி (Voters Helpline Mobile APP), தூண்டுதலில்லாமல் வாக்களித்தல் (InducementFree Voting), வயது வந்தோர் வாக்காளராக பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக நடைபெறும். போட்டிகள் நடைபெறும் தேதிகள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் 15 போட்டியாளர்களின் விபரம் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் தலைமை தேர்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தலைமை தேர்தல் அலுவலகம் மூலம் பரிசீலனை செய்யப்படும். மேலும், 18 வயது பூர்த்தி அடைந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தவறிய மாணவ, மாணவிகளுக்கு “ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு” என்ற தலைப்பின் கீழ் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்தில் “SVEEP Contest -2022\” என்ற Tapன் கீழ் அல்லது https://www.elections.tn.gov.in/SVEEP2022/Account/Login என்ற இணையதள முகவரியில் நேரடியாக வரும் 31ம் தேதி வரை பங்கு பெறலாம். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தவறிய மாணவ, மாணவிகள் (14-17 வயது வரை) தங்களது குடும்பத்திலுள்ள நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி இணையதளம் மூலமாக பங்கு பெறலாம். அவ்வாறு பங்கு பெறும் பட்சத்தில் அவர்கள் பொது பிரிவில் தான் அடங்குவர். மாவட்ட அளவில் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான இப்போட்டிகள் அனைத்தும் வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. சிறந்த 15 போட்டியாளர்களின் விபரம் 31ம் தேதி அன்றுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைகிறது. இப்போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேர்தல் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: