×

வரத்து கால்வாய் சேதம் வீணாகும் வல்லம்பட்டி கண்மாய் நீர் சாகுபடி பாதிக்குமென விவசாயிகள் அச்சம்

சிவகாசி, டிச. 16: வெம்பக்கோட்டை தாலுகா வல்லம்பட்டி கண்மாயில் நீர்வரத்து கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவில் வல்லம்பட்டி பெரிய கண்மாய் உள்ளது. சுமார் 4 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட இக்கண்மாய் நீரை பயன்படுத்தி பனையடிபட்டி, வல்லம்பட்டி, மஞ்சல் ஓடைப்பட்டி, ஆண்டியாபுரம், புல்லகவுண்டன்பட்டி உட்பட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கண்மாய் நிரம்பி மறுகால் சென்றது. கண்மாய் நீரால் சுற்றியுள்ள இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டமும் அதிகரிக்கும். இதனால் இப்பகுதி கிராமங்களில் கிணற்று பாசனத்தில் ஏராளமானோர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கண்மாயில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. கண்மாய் நீர் கடைமடை நிலங்களுக்கு செல்லும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீர்வரத்து கால்வாய்கள் பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இதனால் கண்மாய் நீர் வீணாகாமல் விவசாய நிலங்களுக்கு மட்டுமே பாய்ந்து வந்தது.

ஆனால், தற்போது நீர்வரத்து கால்வாய் சேதமடைந்து உள்ளது. இந்த கண்மாய் மடைகளில் இருந்து திறந்து விடப்படும் நீர் கடைமடை வரை செல்லாமல் காலியிடங்களில் பாய்ந்து வீணாகி வருகிறது. கண்மாய் நிரம்பி மறுகால் சென்றாலும் நீர்வரத்து கால்வாய் சேதமடைந்து கிடப்பதால் ஒரு போகம் கூட நெல் சாகுபடி பணிகள் செய்ய முடியுமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கண்மாயில் வேலி முட்கள் அடர்ந்து முளைத்துள்ளதால் விவசாயிகள் பாசனப்பணிகள் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. வல்லம்பட்டி கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து கண்மாய் கலுங்கு பகுதியில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vallampatti Kanmai ,
× RELATED வரத்து கால்வாய் சேதம் வீணாகும்...