திருமயம் அருகே திருடிய 42 ஆடுகளுடன் 5 பேர் கைது

திருமயம், டிச.16: திருமயம் அருகே வாகன சோதனையில் ஆடு திருடும் கும்பலை போலீசார் பிடித்து 42 ஆடுகளை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் ஆடு திருடும் கும்பலை பிடிக்க போலீசார் அவ்வப்போது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பலனாக கடந்த சில நாட்களாக ஆடு திருடும் கும்பலை பிடித்து போலீசார் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று திருமயம் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை மறித்து சோதனை செய்தபோது, வேனில் 42 ஆடுகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேனில் இருந்த நபர்களிடம் ஆடு குறித்து கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரனாண தகவல் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் வேனில் இருந்த 42 ஆடுகளை பறிமுதல் செய்தனர். மேலும், புதுக்கோட்டை போஸ் நகர் கோபி, காந்திநகர் சஞ்சய், காமராஜபுரம் புஷ்பராஜ், கொட்டகைதெரு ரஞ்சித்குமார், அறந்தாங்கி அபுபக்கர் ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: