×

தில்லையாடி வழியாக அனுமதிக்கபட்ட சாலையில் அரசு பஸ் செல்லாததால் வழிமறித்து போராட்டம்

தரங்கம்பாடி, டிச.16: மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி வழியாக செல்லும் அரசு பேரூந்து அடிக்கடி தில்லையாடி வழியாக போகாமல் மாற்று வழியில் சென்றுவிடுவதால் தில்லையாடி பகுதி மக்கள் அவதிபடுகின்றனர். அனுமதிக்கபட்ட பாதையில் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து கழகத்துடன் மல்லுகட்டி போராடி வருகின்றனர். நேற்று பஸ்சை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகையிலிருந்து தில்லையாடி வழியாக சிதம்பரத்திற்கு 3 முறையும், சிதம்பரத்தில் இருந்து நாகைக்கு 3 முறையும் தில்லையாடி வழியாக அரசு பேரூந்து சீர்காழி கிளை அலுவலகத்தில் இருந்து இயக்கபட்டு வந்தது. தினமும் 6 முறை தில்லையாடிக்கு அந்த பேருந்து வந்து செல்ல வேண்டும். ஆனால் அந்த பேருந்து வருவதில்லை. அதனால் அந்த பகுதி மக்கள் சீர்காழி போக்குவரத்து கிளை அலுவலகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதல்வரின் முதனிபிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பினர். அதை தொடர்ந்து அந்த பேரூந்து தில்லையாடி வழியாக இயக்கபட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும், சிதம்பரத்தில் இருந்து அந்த பேருந்து தில்லையாடி வழியாக செல்லாமல் தரங்கம்பாடி வழியாக சென்று விட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை நாகையில் இருந்து சிதம்பரம் வந்த பேருந்தை வழிமறித்து போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்து கழகத்தின் அலட்சிய போக்கால் தில்லையாடி பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசு போக்குவரத்து கழகத்துடன் மல்லுகட்டி வருகின்றனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பொறையார் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து தில்லையாடி வழியாக பஸ் இயக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து பொதுமக்கள் பஸ் மறியலை கைவிட்டனர்.

Tags : Thillaiyadi ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் புதுவை தொகுதி வேட்பாளரை பாஜ விரைவில் அறிவிக்கும்