உழவர்சந்தை அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் அரவக்குறிச்சி அருகே

குளித்தலை, டிச. 16: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவ தலங்களில் முதன்மையானதும், சைவசமய குரவர்களில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் நேரடியாக பாடல் பெற்றதும், வைர பெருமாள் மற்றும் சிற்றராயர் என்ற சிவ பக்தர்களால் பூஜிக்கப் பெற்றதும், தேவர்களாலும் முனிவர்களாலும் மன்னர்களாலும் வழங்கப் பெற்றதும், வேண்டுவோருக்கு வேண்டும் வண்ணம் அருள் பாலிக்கும் ஐவர்மலை எனப் போற்றப்படும் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் அருகே தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை மாத தெப்ப உற்சவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக போதிய மழை இன்மையால் தெப்பக்குளம் வறண்ட நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் சென்ற மாதம் தொடர் மழை பெய்து வந்ததால் ரத்தினகிரீஸ்வரர் மலை உச்சியிலிருந்து வரும் தண்ணீர் நேரடியாக தெப்பக்குளத்தில் வந்து விழுவதற்கு அறநிலைய துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏற்பாடு செய்தனர்.

இதனால் தற்போது முற்றிலும் தெப்ப குளம் நிரம்பி வழிந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் கோவில் குடி பாட்டுக்காரர்கள், பொதுமக்கள், பக்தர்கள் இந்து அறநிலையத்துறைக்கு கார்த்திகை கடைசி நாளன்று தெப்பத்திருவிழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையை ஏற்ற இந்து அறநிலையத்துறை தெப்பத் திருவிழாவை நடத்த அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து நேற்று கார்த்திகை மாதம் 29ம் நாள் புதன்கிழமை இரவு 7 மணி அளவில் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் நூற்றுக்கணக்கான தகர டின்களை வைத்து உருவாக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டு மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தெப்ப உற்சவம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.இவ்விழாவில் எம்எல்ஏ மாணிக்கம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் சூரியநாராயணன், ஆர்டிஓ புஷ்பா தேவி, செயல் அலுவலர்(ஆட்சி) சிவப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: