×

வரும் 20ம் தேதி ஆருத்ரா தரிசனம் திருவண்ணாமலையில் மார்கழி மாதத்தையொட்டி

திருவண்ணாமலை, டிச.16: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மார்கழி மாதத்தையொட்டி இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படும். அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் அமைந்திருக்கிறது. ஆனாலும், இக்கோயிலில் வைணவ வழிபாடு நடைபெறுவது தனிச்சிறப்பாகும். குறிப்பாக, வைணவ கோயில்களில் மட்டுமே நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு, வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு வழிபாடு போன்றவை அண்ணாமலையார் ேகாயிலில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனுர் மாதம் என அழைக்கப்படும் மார்கழி மாதம் இன்று பிறக்கிறது. அதையொட்டி, இன்று முதல் மார்கழி மாதம் முடியும் வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மதிய நேரத்தில் நடை அடைப்பு கிடையாது. அண்ணாமலையார் ேகாயிலில் மற்ற மாதங்களில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பும், 5.30 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பதும் வழக்கம். மார்கழி மாதத்தில் மட்டும் நடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் இன்று அதிகாலை நடைபெறும். மேலும், உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். மேலும், கடந்த 11ம் தேதி முதல் மாணிக்க வாசகர் உற்சவம் அண்ணாமலையார் கோயிலில் நடந்து வருகிறது. அதன் நிறைவாக வரும் 20ம் தேதி அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அப்போது, அலங்கார ரூபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். மேலும், ஆருத்ரா தரிசனத்தின்போது, நடராஜருக்கு தீப மை அணிவிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Arutra Darshan ,Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...