×

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

அலங்காநல்லூர், டிச. 15: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆலை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முறையான கரும்பு பதிவு செய்யாத காரணத்தினால், 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து கரும்பு அரவை செய்ய முடியாத அவல நிலையில் உள்ளது. இந்த ஆலையின் அரவை பருவத்தை நம்பி கரும்பு விவசாயம் செய்த விவசாயிகள் பலர், கரும்பு விவசாயத்தையே கைவிடும் சூழ்நிலையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தினால் இந்த ஆலையின் அரவை பகுதியில் 2000 ஏக்கர் கரும்பு பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் உற்பத்தி 2000 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை தற்பொழுது மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பதிவு செய்த கரும்புகள் தற்போது 1.50 லட்சம் டன் வரை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த கரும்பையும் சேர்த்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக கரும்பு அரவைக்கு தயார் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரவை செய்ய கரும்பு இல்லாத காரணத்தினால் நிறுத்தப்பட்ட அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை உடனடியாக 2022ம் ஆண்டுக்கான அரவை தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை 10 மணி முதல் ஆலை வளாகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் ராஜேந்திரன்.

கதிரேசன், இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது: தென் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு அரவைருவத்தில் உடனடியாக துவங்க வேண்டும். இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் வகையில் ஆலை வளாகத்தின் முன்பு உணவு சமைத்து காத்திருக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். மேலும், அரசு சார்பில் இந்த ஆண்டு ஆலை இயக்கப்படும் என உத்திரவாதம் தரும் வரையில் போராட்டத்தை கை விடுவதில்லை, என்றனர்.

Tags : Alankanallur ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...